About Us

2007இல் துவங்கப்பட்ட தங்கத்தாமரை பதிப்பகம் பதிப்பக உலகில் இன்னமும் ஒரு புதுவரவாகவே திகழ்கிறது. தரமான நல்ல நூல்களை வெளியிடவேண்டும் என்ற நல்நோக்கத்துடன் துவங்கப்பட்ட தங்கத்தாமரை பதிப்பகத்தின் ஆசிரியப்பொறுப்பை ஏற்று செயல்படுபவர்கள் இரட்டை எழுத்தாளர்கள் சுபா.

ஞாலம் போற்றும் ஞானிகளின் வரலாறுகளும், ஞானப்பாதையை நோக்கி அழைத்துச் செல்ல அவர்கள் அருளிய அருள்வாக்குப் புதையல்களும் கொண்ட ஆன்மிக நூல்களையும்,

கலாச்சாரம் பேணும், மனித நேயத்தை முன்னிறுத்தி, நல்வழி காட்டும் சமய நூல்களையும்,

எழுகடல் அளவுக்கான அர்த்தங்களை தம்முள் அடக்கி வைத்திருக்கும் தத்துவ நூல்களையும்,

திறமை வாய்ந்த எழுத்தாளர்களின் அனுபவக்கோர்ப்புகளால் ஆன புதினங்கள் மற்றும் சிறுகதைள் அடங்கிய நூல்களையும், மனித குலம் என்றும் எழுச்சியுடன் ஏறுநடை போட்டு முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு உதவும் வகையில் தன்னம்பிக்கை நூல்களையும்,

எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் எப்படி அணுகுவது என்பதை மனோதத்துவ முறைப்படி எடுத்துக்காட்டுடன் இயம்பிடும் கற்பனை கலக்காத கட்டுக்கோப்பான நூல்களையும்,

பக்திப்பயணங்கள் மூலம் முக்திக்கு வழிகாட்டும் புதிது புதிதான பயண நூல்களையும், பாரம்பரியம் காக்கும் சுற்றுலாத் தலங்களைப் பற்றிய பயண நூல்களையும்,

பாரதப் பாரம்பரியமும், கவின் மிகு கலாச்சாரமும் பின்னிப் பிணைந்த சமையல் நூல்களையும்,

அமரத்துவம் வாய்ந்த இலக்கிய நூல்களையும்,

அன்றாட வாழ்க்கையை அழகாக அமைத்துக் கொள்ள வழிகாட்டும் சோதிட நூல்களையும், நாளும், நாளும் வெளியிடுவதில் தங்கத்தாமரை பதிப்பகம் முனைப்புடன் செயல்படுகிறது.

தங்கத்தாமரை வெளியிடும் அத்தனை நூல்களும் நம்பகத்தன்மை வாய்ந்தவை. உண்மையான தகவல்களை உள்ளடக்கியவை.

ஓவியக்கலை ஓம்பப்படவேண்டும் என்ற உன்னத நோக்கம் காரணமாகவே தங்கத்தாமரை வெளியிடும் அத்தனை நூல்களிலும் திறமை வாய்ந்த ஓவியர்களின் கலைப்படைப்புகள் தவறாமல் இடம் பிடித்துள்ளன. இந்தப் பார்வை விருந்துகள் வாசகர்களின் வளமான வாசிப்புக்கு மேலும் சுவாரசியம் கூட்டுகின்றன. இடையறா வாசிப்புக்கு இடையே இளைப்பாறவும் வைக்கின்றன.

எழுத்துலகம் ஏற்றிப் போற்றும் எழுத்தாளர்களான காஷ்யபன், ரா.கி.ரங்கராஜன், கேலிச் சித்திர மன்னன் மதன், அனுராதாரமணன், இளைஞர்களின் நெஞ்சம் கவர்ந்த ராஜேந்திரகுமார், சுபா ஆகியோரின் தரமான படைப்புகளையும் தங்கத்தாமரை பெருமையுடன் வெளியிடுகிறது.

கோட்டுச் சித்திரங்களுடன் உள்ளம் கொள்ளை கொள்ளும், ‘மகாபலிபுரம் – உங்களுடன் வரும் ஓர் வழிகாட்டி’என்னும் எங்களது பயணநூல், நமது வளமான பாரம்பரியத்தை உலகமக்கள் அனைவரும் அறிந்து உவகை கொள்ள வேண்டும் என்ற ஏற்றமான இலட்சியத்துடன் தமிழ், ஆங்கிலம், ப்ரெஞ்சு, ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வெளிவந்து பல பதிப்புகளைக் கண்டு இன்னும் பீடுநடை போடுகிறது. தமிழ் வேதமாகத் திகழும் நாலாயிர திவ்யப்பிரபந்தம், வாசிப்பதற்கு எளிதான வகையில் பதம் பிரிக்கப்பட்டு வெளியாகி ஆறாவது பதிப்பைக் கண்டிருக்கிறது.

நூல்கள் மட்டுமல்லாமல், புதுமையான வகையில், ஓவியர் திரு. ஜெ.பி.யின் அற்புத கைவண்ணத்தில் ஸ்ரீ ரமண மகரிஷி,, காஞ்சி மகா பெரியவா மற்றும் ஷீர்டி சாயி பாபா உள்ளிட்ட மாபெரும் மகான்களின் கருப்பு வெள்ளை கோட்டோவியங்கள், நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த பல்வேறு தெய்வங்களின் வண்ண கோட்டோவியங்கள், பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் மகாபலிபுர கோட்டோவியங்கள் போன்ற பல்வேறு கண்கவரும் ஓவியங்களையும் தங்கத்தாமரை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

தங்கள் வீடுகளின் பூஜையறையில் வைத்து பக்தியுடன் பூஜிக்க, வரவேற்பறையை அழகாய் அலங்கரிக்க, சுப நிகழ்வுகளில் பிரியமாய் பரிசளிக்க. நண்பர் மற்றும் உறவினர்களுக்கு அன்புடன் அளித்திட, அலுவகலங்களில் நினைவுப் பொருளாய் நெகிழ்வுடன் வழங்கிட, தங்கள் அங்காடிகள் (கடைகள்) கண்ணியமாய் காட்சியளிக்க என எல்லா விதங்களிலும் ஒரு அழகிய அரிய கைவண்ணக் கலைப்பரிசாய் இருக்கும் இந்த ஓவியங்கள் !!

உள்ளே வாருங்கள். ஓர் உலாச் செல்லுங்கள். அற்புதமானதோர் அனுபவம் அங்கே உங்களுக்காகக் காத்திருப்பதை உணர்வீர்கள்.